வாடகை நிறுவனங்களிடமிருந்து திருடப்பட்ட 17 வாகனங்களை முல்லேரியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வாகனம் திருடப்படுவது தொடர்பாக தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, பதினாறு கார்கள் மற்றும் ஒரு வேன் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினால் திருடப்பட்ட வாகனங்கள், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லேரியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், வாகனங்களை வாடகைக்கு வழங்கியதன் பின்னர், தமது வாகனத்தை இழந்தவர்கள், முல்லேரியா பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.