நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் லொறியொன்று முச்சக்கர வண்டி மீது கடந்த முதலாம் திகதி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதனை அடுத்து, குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பெண்கள் உயிரிழந்ததுடன், கடும் காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தப்பிச் சென்ற லொறி சாரதியை தேடும் பணிகள் கடந்த நாட்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்படி, குறித்த லொறி சாரதி மாத்தளை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த லொறி சாரதியை, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.