கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூற்றுக்கு நூறுவீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் தலைமையில் துறைமுக தொழிற்சங்க பணியாளர்களுக்கிடையிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றபோது பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, உள்ளூர் வளங்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிற்கும் விற்பனை செய்யவோ அல்லது கட்டுபாடுகளுக்கு வழங்கவோ மாட்டாது என அவர் கூறியுள்ளார்
இந்த நிலையில், பிரதரின் அறிப்பை அடுத்து, தமது தொழிற்சங்க போராட்டத்தை நாளை முதல் கைவிடப் போவதாக, துறைமுக தொழிற்சங்கம் இதன்போது அறிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, இந்தியாவுக்கு விற்பனை செய்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, துறைமுக தொழிற்சங்கத்தினரால், இன்று நான்காவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், துறைமுகத்தின் கிழக்கு முனையம் வெளிநாடுகளுக்கு வழங்கப்படமாட்டாது என்பதை உறுதியளித்து, எழுத்து மூலமான ஆவணமொன்றை வழங்குமாறு தொழிற்சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
எனினும், தனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைகளை தீர்த்துவைத்துள்ளதாகவும், அது குறித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை இதுவரை வழங்கியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தாம் வாக்குறுதியளித்தால் அதனை நிறைவேற்றுவதாகவும், பிரதமர் மஹிந்த ராஜகபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் கலந்துரையாடல்களுடன் மட்டுப்படாது, அவை செயற்படுத்தப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.