தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்டவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 462 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் சுமார் 2 ஆயிரத்து 300 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி செயற்பட வேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை சுகாதார விதிமுறைகளை தவிர்த்து செயற்படுவதினால் ஏதேனும் ஒரு பகுதியில் கொரோனா பரவல் ஏற்படுமாயின் குறித்த பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படும் எனவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை அனைத்து அலுவலகங்கள் திணைக்களங்கள் வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் உரியமுறையில் பின்பற்றி செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை சிவில் பாதுகாப்பு படையினரால் கொழும்பு வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் பலர் சுகாதார விதிமுறைகளை தவிர்த்து செயற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.