நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பல்வேறு ரயில் சேவைகளை மீள இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே திணைக்களம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டை -மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு -கொழும்பு கோட்டை ரயில் சேவைகள் மற்றும் பெலிஅத்த -வவுனியா மற்றும் வவுனியா -பெலிஅத்த ஆகிய ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், இவை தவிர்ந்த மேலும், 35 ரயில் சேவைகளும் மீள சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த ரயில் சேவைகள் அனைத்தும் நாளைய தினம் முதல் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 12 ரயில் சேவைகள் மீள சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, விசேடமாக, கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை இடையிலான யாழ்தேவி, கொழும்பு கோட்டை -காங்கேசன்துறை இடையிலான உத்தர தேவி, கொழும்பு கோட்டை -பதுளை இடையிலான பொடி மெனிகே ஆகிய ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.