சுகாதார விதிமுறைகளுக்கமைய நாட்டின் திரையரங்குகள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ள நிலையில் முப்பரிமாண திரைப்படங்களை காட்சிபடுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளை மீள திறப்பதற்கு பிரதமரும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.
அதற்கமைய, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலுமுள்ள திரையரங்குகள் இன்று முதல் மீள திறக்கப்படவுள்ளன.
இதன்படி குடும்ப உறுப்பினர்கள் அல்லாத ஏனைய நபர்களுக்கு அருகில் உள்ள ஆசனங்களில் அமர்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக கலைத்துறை எதிர்நோக்கியுள்ள பாதிப்பு தொடர்பில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் உள்ளிட்ட கலைஞர்கள் பலர் அண்மையில் பிரதமருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
இதன்பிரகாரம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து திரையரங்குகள் மீள திறக்கப்பட வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது