மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு, நேற்று எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட RAPID ANTIGEN பரிசோதனையின் மூலம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட RAPID ANTIGEN பரிசோதனைகளின் மூலம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நபர்களுடன் தொடர்புடைய 377 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு, இதுவரையான காலப்பகுதியில் 10 ஆயிரத்து 980 பேருக்கு RAPID ANTIGEN பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் RAPID ANTIGEN பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி வரை இந்த பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார தரப்பினர் தீர்மானித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.