சேனா படைப் புளுவின் தாக்கத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 40 வீதமான சோளப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்துள்ளார்.
தமண, உகன, திருக்கோவில், அட்டாளைச்சேனை ஆகிய கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சேனா படைப் புளுவின் தாக்கம் அதிக அளவில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடுத்து, சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, விவசாய போதனாசிரியர்கள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கி, பிரதேச செயலக ரீதியாக விவசாய செயலணிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேனா படைப் புளுவின் தாக்கம் தொடர்பில், ஒவ்வொரு விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளிலும், விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் சேனா படைப் புளுவின் தாக்கத்தினால் பகுதியளவில் பாதிக்கப்பட்ட சுமார் 14 ஆயிரத்து 700 சோளப் பயிர்ச் செய்கையாளர்களுக்கான நட்டஈட்டை விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.