எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை கூறியுள்ளார்.
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், கடந்த அரசாங்கத்தினால் குறித்த ஒப்பந்தம் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறிப்பிட்ட ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னர், கேள்வி மனுக் கோரலை செய்யாது, காலநீடிப்பு செய்வது தவறான விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இதன் காரணமாக இராணுவத்தின் கணினிப் பிரிவு மற்றும் அதனுடன் இணைந்த பிரிவுகளுக்கு வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் செயற்பாடு கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த நடவடிக்கையின் மூலம், பாரிய வருமானமொன்றை அரசாங்கம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.