கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்யும் விவகாரத்தில், அரசாங்கம் உடனடி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு மற்றும் யோசனைகளை உள்ளடக்கி, கட்சியின் பிரதித் தலைவரான ருவன் விஜயவர்தனவினால், மதத் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல்களை தகனம் செய்யும் விவகாரம், மக்களின் உரிமைகளுக்கு அப்பால், தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளதாக, ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இந்த விடயத்தை பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு கொண்டுவந்து, உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விடயத்தில் தாமதம் அடைவதின் ஊடாக, இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த, பல்வேறு சக்திகள், சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளும் என ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அவ்வாறான முயற்சிகளை தோற்கடிப்பதற்காகவும், மக்களின் நம்பிக்கையை வெல்வதற்காகவும், அரசாங்கம் உடனடி தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.