தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், மாணவர்களுக்கு தற்காலிக பாடசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிக்கின்றார்.
இதன்படி, பெற்றோரின் கோரிக்கைகளுக்கு அமைய, அருகிலுள்ள பாடசாலைகளில் கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் கூறினார்.
பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான தீர்மானமொன்று இல்லாத பட்சத்தில், மாணவர்கள் மனரீதியான அழுத்தத்திற்கு தள்ளப்படுவார்கள்.அது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்றது. இதனாலேயே அதனைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் தலையிட்டு, பல்வேறு திட்டங்களை வகுத்து, பாடசாலைகளை திறக்க தீர்மானித்தோம். இதுவே பெற்றோரின் அபிலாசையாகவும், தேவையாகவும் இருந்தது.குறிப்பாக மத்திய மாகாணத்தில் சில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளை தற்போதைக்கு திறக்க முடியாது.எனினும் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பியேனும் கல்வி நடவடிக்கைளைத் தொடர்வதற்கு தற்காலிக வசதிகளை செய்த தருமாறு, மத்திய மாகாண பெற்றோர்களின் கோரிக்கையாக இருந்தது.இந்த நிலையில் மத்திய மாகாண ஆளுனர் லிலத் யூ கமகே இது தொடர்பில் ஆராய்ந்து நடைமுறைக்கு சாத்தியமான சில யோசனைகளை முன்வைத்துள்ளார்.இந்த நிலையில் இந்தத் திட்டத்தை ஏனைய பகுதிகளிலும் முடிந்தளவு நடைமுறைப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.