மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இந்த குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, நீதி அமைச்சின் பிரதான சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ. ஆர். டி சில்வா, நீதி அமைச்சின் மேலதிக நிர்வாக செயலாளர் ரோஹண ஹப்புகஸ்வத்த, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்ஹ, குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சம்பவத்துக்கான காரணங்கள், இதற்காக பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் மற்றும் இது தொடர்பில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் இவ்வாறான சம்பவங்களை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை நீதி அமைச்சருக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வாரத்துக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறுகிய கால மற்றும் நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.