அரசாங்கத்தின் மீதான நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த, திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடாகவே மஹர சிறைச்சாலை அமைதியின்மை காணப்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் குற்றச்செயற்பாடுகளுடன் தொடர்புடைய சமயங் என்ற நபர் கொல்லப்பட்டார். அவருடைய உதவியாளர் சத்துரங்க என்கின்ற ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவர்கள் சரத் என்கின்ற ஒருவகை வில்லைகளை கைதிகளுக்கு கொடுத்து சிறைச்சாலைக்குள் கலவரம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு செய்தி ஒன்று கிடைத்துள்ளது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அதனை தற்போது சிறையில் முன்னெடுக்க முடியாது உள்ள போதைபொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களே குறித்த நபர் மூலம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் தொடர்புடைய பலரை சிறைமாற்றம் செய்துள்ளனர். வெலிக்கடையில் முடியாது போனதை மஹர சிறையில் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இது கொரோனா நிலைமை காரணமாக இடம்பெற்றதாக பலரும் கூறுகின்றனர். உண்மையில் இது ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச ரீதியில் ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும்.