நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 67 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு குணமடைந்தவர்களில் 563 பேர் கடற்படை வீரர்கள் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 41 கடற்படையினர் நேற்று குணமடைந்ததை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 791 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், 41 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 78 ஆயிரத்து 723 PCR பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் ஆயிரத்து 551 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளில் கொரோனா தொற்றுடன் யாரும் அடையாளம் காணப்படவில்லை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.