நேற்று இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுள்ளது.
குறித்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளது.
அத்துடன், சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இன்று மற்றும் நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையின் காரணமாகவே இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் தனிநபர்கள் மற்றும் வாகனங்கள் என்பனவற்றை பரிசோதனைக்குட்படுத்துவது தொடர்பில் கடமையில் ஈடுபட்டுள்ள அனைத்து பொலிஸாருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு மாத்திரமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.