லீசிங் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
லீசிங் நிறுவனங்கள் வாகனங்களை மீளக் கைப்பற்ற முன்னர் பொலிஸாருக்கு அறிவிப்பதில்லை எனவும், வாகனத்தை கைப்பற்றிய பின்னரே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பலாத்காரமான முறையில் இவ்வாறு வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது, அது சில நேரம் வன்முறையாக மாறுவதற்கு அடிப்படையாக இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், வாகனங்களை கைப்பற்றியதன் பின்னர் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளை மறுஅறிவித்தல் வரை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொவிட் – 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, முச்சக்கர வண்டி உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்படுகின்ற மாதாந்த தவனைக் கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு அறவிட வேண்டாம் என லீசிங் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இது தொடர்பான சுற்றறிக்கை கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு மாறாக சில நிறுவனங்கள் தவனைக் கட்டணம் செலுத்தப்படாத வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையிலேயே, லீசிங் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, வாகன லீசிங் முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படுத்திய தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கடந்த செவ்வாய்கிழமை வாகனங்களைக் குத்தகைக்கு வழங்கும் நிதிநிறுவனம் ஒன்றின் முன்பாக கொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.