தூபாராம புனித பூமியை புனரமைக்கும் பணிகளை தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்.
தூபாராம இலங்கையின் முதலாவது தூபி என எழுத்துப்பூர்வ ஆதாரங்களுடன் வரலாற்றில் காணப்படுவதாக தூபாராமவுக்கு பொறுப்பான கஹல்லே ஞானிந்த தேரர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த புனித பூமியை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள தேவையற்ற நிர்மாணங்கள் அதன் வெளிப்புறத்திற்கும் பக்தர்களுக்கும் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, அவ்வாறான நிர்மாணங்களை அகற்றிவிட்டு உரிய வசதிகளை செய்து தருமாறு கஹல்லே ஞானிந்த தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இவற்றைக் கருத்திற் கொண்டு தூபாராம புனித பூமியை அண்மித்த பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, தூபராமயவை தொல்பொருள் மதிப்புள்ள இடமாக மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்படி, இது தொடர்பில் உடனடியாக ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறும், இரண்டு வருடங்களுக்குள் அதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்