ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் அரச செலவீனங்களுக்கு என ஆயிரத்து 43 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அனுமதிக்கு அமைவாக அரச செலவீனங்களுக்கான நிதி அடங்கிய வரவு செலவுத் திட்ட சுற்றுநிரூபமானது நிதி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறு மூன்று மாதங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரத்து 43 பில்லியன் ரூபாவில், 644.19 பில்லியன் ரூபா அரச ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 546.18 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், திறைசேரியின் செயற்பாடுகளுக்காக 486.1 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சிற்கு 107.27 பில்லியன் ரூபாவும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 5.17 பில்லியன் ரூபாவுமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினாலும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் தற்போதைய நிலையில், அரசாங்கத்தின் செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் காலங்களுக்கு செலவுகளை மட்டுப்படுத்துமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும், அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய செயற்திட்டங்களுக்கு மாத்திரம் கூடிய கவனத்துடன் செலவீனங்களை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.