பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனைகளை உள்ளடக்கிய வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த வழிகாட்டல்கள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரியவுக்கு இன்றைய தினம் அனுப்பிவைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பொதுத் தேர்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் தேர்தல் ஆணையகத்தில் இன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திகதி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான 17 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களத்தின் அதிகாரியான கங்கனி லியானகே தெரிவித்துள்ளார்.
தட்டச்சு மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பிற ஏற்பாடுகள் கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் அதிகாரப்பூர்வ அச்சிடுதல் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் திணைக்களம் முன்னர் 17 மில்லியன் வாக்குச் சீட்டுக்களை அச்சிடுமாறு அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்ததையடுத்து தாம் வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகளை ஆரம்பித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.