இன்று சர்வதேச தொழிலாளர் தினம்!
எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர பொழுதுபோக்கு, எட்டு மணிநேர ஓய்வு என்பவற்றை தொழிலாளர் உரிமைகளாக வென்றெடுத்த தினம்தான் இந்த நாள்.
1890ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொண்டாடப்பட்டு வரும் தொழிலாளர் தினத்தின் இன்றைய நிலை என்ன?
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் அடிப்படை நோக்கங்களின் இன்றைய நிலை என்ன?
இன்று எல்லா தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலை என்ற உரிமை கிடைக்கிறதா?
தொழிலாளர்கள் சுரண்டப்படாமல் அவர்களுக்கான உரிமைகள் தொழில் தருநர்களால் வழங்கப்படுகின்றனவா?
இன்றைய நாளில் எமது நாட்டைப் பொறுத்தவரை தமது அரசியல் கட்சியின் பலத்தைக் காட்டும் ஒரு நாளாக மே தினம் மாறியிருக்கிறது.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் கட்சிகளுக்கு உறுப்பினர்களை இணைக்கும் இடமாக மாறிப் போயிருக்கின்றன.
1800களில் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு அடிமைகளாய் வேலை வாங்கப்பட்டனர்.
ஆனால், இன்று தாம் நவீன அடிமைகளாய் மாற்றப்பட்டிருப்பதை உணராமல் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆகவே, தொழிலாளர் தினத்தின் உண்மையான இலக்குகளை மையமாக வைத்துதான் இந்த நாளை நாம் கொண்டாடுகிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வேலை என்பது நம் வாழ்வின் ஒரு அங்கம். அதனை மாற்ற முடியாது. ஆனால், வாழ்க்கைக்காகத்தான் வேலையே தவிர, வேலைக்காக வாழ்க்கை அல்ல.
20 வயதில் உழைக்க ஆரம்பிக்கும் நாம், 60 வயதில் களைத்து ஓய்ந்து, திரும்பிப் பார்க்கும் போது எமது வாழ்க்கையில் வெறுமை மட்டுமே எஞ்சியிருக்கிறது.
வாழ்க்கையில் ஒவ்வொருவருமே தொழிலாளர்கள்தான். பொருத்தமான தொழிலைத் தெரிவு செய்வதும் வாழ்வதற்காக தொழில் புரிய வேண்டியதும் நாம் இன்றைய நாளில் நினைவு கொள்ள வேண்டிய விடயங்களாகின்றன.
இதேவேளை, இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தாக்கத்தினால் பலரது தொழில்கள் முடங்கிப் போயிருக்கின்றன.
உலக நாடுகளின் தொழிற்துறை கடுமையான சரிவை எதிர்நோக்கியிருக்கிறது.
இதை சரி செய்ய வேண்டியது தொழிலாளர்களாகிய நம் ஒவ்வொருவரினதும் கைகளில்தான் இருக்கிறது.
நம் ஒவ்வொருவரினதும் உழைப்புதான் கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் மாபெரும் சக்தியாக இருக்கப் போகிறது.
அத்துடன், இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துக் களத்தில் போராடும் தொழிலாளர்களை நாம் நினைவு கூரக் கடமைப் பட்டிருக்கிறோம்.
மருத்துவர்கள், தாதியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், சுகாதார அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர், தன்னார்வலர்கள், ஊடகவியலாளர்கள் என களத்தில் நிற்கும் ஒவ்வொருவரும் இன்றைய நாளில் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.
ஆகவே, இன்றைய நாளை கொரோனா தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக அர்ப்பணிப்பதுடன், எதிர்காலத்தில் தொழிலாளர் தினத்தின் உண்மையான நோக்கத்தை அடைய பாடுபடும் ஒரு நாளாக நாம் மாற்றுவோம்.
உலகின் அத்தனை தொழிலாளர்களுக்கும் எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவின் தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்!!!