புரோ ஹொக்கி லீக் இரண்டாவது தொடரின் ஆண்கள் மற்றும் மகளிருக்கான போட்டிகளை 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீடித்துள்ளதாக சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
உலகின் சிறந்த ஹொக்கி அணிகள் கலந்து கொள்ளும் புரோ ஹொக்கி லீக் போட்டிகளின் முதல் தொடர் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக ஆண்கள் மற்றும் மகளிா் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தொடர் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போட்டி ஜூன் மாதம் வரை நடைபெறும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச ரீதியில் அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் புரோ ஹொக்கி லீக் தொடருடன் தொடர்புடைய 11 நாடுகளின் ஹொக்கி சம்மேளனங்களுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, வீரர்களின் நலன் கருதி புரோ ஹொக்கி லீக் இரண்டாவது தொடரை நடாத்துவதற்கான காலம் 2021 ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புரோ ஹொக்கி லீக் மூன்றாவது போட்டி 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடாத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.