புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் உள்ளடங்கிய தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தனியார் நிறுவனமாக இருந்தாலும், அரச நிறுவனமாக இருந்தாலும், நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் போது, அவற்றை கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. இலங்கை தர நிர்ணய நிறுவனம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் உள்ளடங்கியுள்ளமையை முதலில் கண்டறிந்தது தர நிர்ணய நிறுவனம் அல்ல. உண்மையில், தர நிர்ணய நிறுவனம் தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை. இதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்படுத்துவதற்கு செயன்முறையொன்று இல்லை. சந்தைக்கு விநியோகித்து முடிக்கப்பட்டு விட்டது. இவற்றை ஏன் விநியோகித்தீர்கள் என, தர நிர்ணய நிறுவனத்திடம் கேட்டால், அது எமது பொறுப்பல்ல, சுங்கப் பிரிவின் பொறுப்பு என கூறுகிறார்கள். சுங்கம் யாரின் பொறுப்பில் உள்ளது? அது நிதியமைச்சரின் பொறுப்பில் உள்ளது. ஆகவே செயற்பாடு தோல்வி அடைந்துள்ளது. சுங்கத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதிக்கு முடியாமல் போயுள்ளது. அதனை ஒப்புக் கொள்ளுங்கள். அரசாங்கம் கடமையை செய்ய தவறியுள்ளது.