பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கவுள்ளதாக, முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கக் கோரி பெருந்தோட்ட நிறுவனங்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் மே 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை விதிப்பதற்கான கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கவுள்ளதாக, முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றும் எனவும், முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தமது நிலைப்பாடு தொடர்ந்தும் அதே நிலையில் பேணப்படுவதாக முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடிய மாற்றுத் திட்டமொன்றே தம்மால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிராகரிக்கப்பட்டுள்ள தமது திட்டம் தொழிலாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்கக்கூடிய, முற்போக்கான திட்டமாகும் என, முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ஆயிரம் ரூபா நாள் சம்பளம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பயன் தராது எனவும், முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.