நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணையை, நாட்டுக்கு இறக்குமதி செய்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்புகின்றார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தவினடம், எதிர்க் கட்சித் தலைவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
இந்த நாட்டு மக்களின் சுகாதாரம், பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது ஏனைய நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பட்டு உள்ளதா என கேட்கின்றேன்.என்ன இது வேடிக்கை? சர்வதேச வியாபாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், நாம் நாட்டு மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் தெரிவிக்கின்றார். அவர்தான் நாட்டு மக்களுக்கு எதிரியாகும். புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தைகளுக்கு விநியோகிப்படவில்லை என அவர் மிகவும் தெளிவாக குறிப்பிட்டார். அது இன்று முழுமையான பொய்யாகியுள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தம் தேங்காய் எண்ணெயை, இந்த நாட்டு சந்தைகளுக்கு விநியோகம் செய்த நபர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அவர்களது நிறுவனங்களின் உரிமப் பத்திரங்களை அவ்வாறே கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுமா? அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்போவதில்லையா, அவ்வாறு இல்லாது வர்த்தக அமைச்சர் அறிந்து கொண்டுதான் இவற்றை விநியோகம் செய்ததா?
இந்த நிலையில், குறித்த கேள்விக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய், சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துமாறு சவால் விடுத்தார்.
அமைச்சர் ஒருவருக்கு உள்ள அதிகாரத்தை, முறையற்ற விதத்தில் சட்டவாட்சியை மீறும் வகையில் பயன்படுத்துவது நியாயம் என நான் நினைக்கவில்லை. தேங்காய் எண்ணையை விநியோகிக்கவும், அதனை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்க எனக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. அதற்காக தயாரிக்கப்பட்ட சுங்க கட்டளைச் சட்டத்தின் படி, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுங்கத் திணைக்களத்திற்கே அதிகாரம் உள்ளது. இதில் அரசியல்செய்ய முடியாது. ஆனால் அவர்களுடைய காலத்தில் அவ்வாறு இருந்தது. விநியோகிக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய்களில் நச்சுத்தன்மை உள்ளது என இதுவரை எந்தவொரு இடத்திலும் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு ஏதேனும் இடங்கள் இருந்தால் நீங்கள் கூறுங்கள். நாம் முடிந்தளவு மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால் நச்சுப் பதார்த்தம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.