குளியாபிட்டிய பகுதியில், புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பிரஜை, திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சந்தேகநபர், சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக, வாரியபொல வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பின்னணியில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில், கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கமைய, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர் வாரியபொலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, சுகயீனம் காரணமாக நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலம் வாரியபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற உத்தரவின் பின்னர் பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.