அம்பாறை மாவட்டத்தில், கடந்த மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி செயற்பட்ட 43 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வர்த்தகர்களுக்கு 01 இலட்சத்து 63 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ.றிஸ்லி தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தகர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
60 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையிலேயே, அவர்களில் 43 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விலைப் பட்டியலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்தமை, நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி மேலும் குறிப்பிட்டுள்ளார்.