கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைவிடப்பட்டிருந்த ஒரு தொகை தங்க ஆபரணங்களை சுங்கபிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விமானநிலையத்தின் பயணிகள் கழிப்பறை பகுதியில் குறித்த தங்க ஆபரணதொகை கைவிடப்பட்ட நிலையில் சுங்கப்பிரிவினரால் இன்று மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்ரிய தெரிவித்துள்ளார்.
சுமார் 13 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்கள் அடங்கிய மூன்று பொதிகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபரினால் கடத்துவதற்கு முற்பட்ட மேலும் ஒரு தொகை தங்க ஆபரணங்கள் இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என சுங்கத்திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.