போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் 13 பேர் உள்ளிட்ட 17 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை மீண்டும் விற்பனை செய்ததாக குறித்த நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த, வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கமைய, குறித்த 17 பேரையும் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்கின் 16 மற்றும் 17 ஆவது சந்தேகநபர்களிடம் இரகசிய வாக்குமூலங்களை பதிவு செய்யவும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.