தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18 பேருக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 18 பேரும், கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றசாட்டின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஹபரன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சிறிகம பிரதேசத்தில் பெண் ஒருவர் உள்ளடங்களாக 18 பேருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 232 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.