பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கலந்துரையாடியதன் பின்னரே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை குறித்து தீர்மானம் மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிக்கின்றார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆணைக்குழு முன் பலர் வாக்குமூலம் அளித்திருந்தனர். இது ஒரு பிரிவு மாத்திரமே. அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவினிடத்தில் மேலும் பலவற்றை எதிர்பார்த்தோம். இந்த தாக்குதலைத் தூண்டியோர், பணம் உதவி வழங்கியோர், அதற்கான உபகரணங்கள் பெற்றுக்கொண்ட விதம் குறித்து ஆராய்வதே நோக்கமாகவும் இருந்தது. இதுகுறித்து உண்மையை அறிந்துகொள்ளவும், பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவருதலும் மிகமுக்கியாகும். அத்துடன் தாக்குதல் தொடர்பதன அறிக்கை தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என்ன என்பதே தற்போது முக்கிய நடைமுறைக் கேள்வியாக உள்ளது.கார்தினாலுடன் கலந்துரையாடியதன் பின்னரே இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். அவரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பன மிகவும் முக்கியமானதாகும்.
இதேவேளை, கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை அவர் எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டார் என கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திக்க தீர்மானித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது,
உயிர்த்த ஞாயிறு விசாரணை அறிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு தொடர்பில் கர்தினால் அண்மையில் அதிருப்தி வௌியிட்டிருந்தார்,
எவ்வாறாயினும் இந்த அமைச்சரவைக் குழு இன்று பிற்பகல் தமது முதலாவது சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.