உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை, உடனடியாக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த அறிக்கையின் உள்ளடக்கங்களை மாற்றுவதற்காகவே, புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த அறிக்கை விவாரகத்தில் அவர்களின் குழு தலையீடு செய்யும் எனில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் குறிப்பிடுகின்றார்.
குறித்த அறிக்கையை ஆராய்ந்து, வழக்குத் தொடருவதற்கான அதிகாரம் சட்டமா அதிபருக்கே காணப்படுவதாகவும், அரசியல்வாதிகளை இதற்காக நியமிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாட்சியங்களை மறைக்கும் நோக்கிலேயே, ஜனாதிபதியினால் இவ்வாறு அரசியல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.