இலங்கை பொலிஸ் துறையில், பெண்களின் பிரதிநித்துவம் குறித்து வெளியாகும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் துறையில் பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், சில பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் பின்னணியிலேயே, குறித்த செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், அவை உண்மைக்குப் புறம்பானவை எனவும், பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு, ஒருவருக்கு மாத்திரமே அனுமதி கிடைக்கப் பெற்றிருந்த போதிலும், பொலிஸ் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி மேலும் ஒன்பது பெண்களுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரச நிறுவனங்களில் 15 வீதமான பதவிகளை பெண்களுக்கு ஒதுக்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நடைமுறையை தாமும் பொலிஸ் துறையில் பின்பற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பெண் உத்தியோகத்தர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாகவும், அவர்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் வெளியாகும் செய்திகளை தாம் புறக்கணிப்பதாக, பொலிஸ் தலைமையகம் அறித்துள்ளது.