தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்நிறுத்தி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஆரம்பமானது.
சிவில் அமைப்புகள், மதத்தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கடசிகளின் ஏற்ப்பாட்டில் இந்த போராட்டம் ஆரம்பிக்க்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், காணிகள் சுவீகரிக்கப்படுதல், முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுதல், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.
குறித்த பேரணி மட்டக்களப்பு, தாழங்குடா பிரதேசத்தில் இருந்து நாளை மீண்டும் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த காவல்துறையினரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் நீதிமன்ற நியாதிக்க எல்லைக்கு உற்பட்ட பகுதிக்குள் போராட்டங்களை நடத்துவதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றால் இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவானது இன்று முதல் 6 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.