நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 715 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு தேசிய செயலணி இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தின் பொரளை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் 16 பேரும் புறக்கோட்டை பகுதியில் 15 பேரும் பம்பலப்பிட்டி பகுதியில் 14 பேரும் நாரஹேன்பிட்டியில் 13 பேரும், மொரட்டுவை பகுதியில் 11 பேரும் கொட்டாஞ்சேனை மட்டக்குளி ஆகிய பகுதிகளில் 9 பேரும் கல்கிஸ்ஸை பகுதியில் 8 பேரும், மருதானை தெஹிவளை ஆகிய பகுதிகளில் 7 பேரும் கறுவாத்தோட்டம் கிராண்ட்பாஸ் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் 6 பேரும் நேற்றைய நாளில் கொரோனா தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கெம்பெனித்தெரு பகுதியில் ஐவரும் புதுக்கடை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளில் மூவரும் வெள்ளவத்தை பகுதியில் ஒருவரும் ஏனையவர்கள் கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 142 பேரும் பதுளை மாவட்டத்தில் 61 பேரும் குருணாகல் மாவட்டத்தில் 53 பேரும் கண்டி மாவட்டத்தில் 43 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 40 பேரும் காலி மாவட்டத்தில் 24 பேரும் ரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேரும் பொலன்னறுவை மாவட்டத்தில் 14 பேரும் நேற்றைய நாளில் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஏனையவர்கள் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 710 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 56 ஆயிரத்து 945 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 325 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருதுடன் இதுவரை 330 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதற்காக நேற்றைய நாளில் 12 ஆயிரத்த 340 பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டில் முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 93 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7 ஆயிரத்து 406 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்