யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் PSM சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் இராணுவம், பொலிஸார் உள்ளிட்ட பல தரப்பினரினதும் பங்களிப்புடன் இந்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்த கூட்டத்திற்கு முன்னதாக, இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏனைய மாவட்டங்களுக்கும் போதைப் பொருள் விநியோகம் இடம்பெறுவதாக இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை அடுத்து, இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து போதைப் பொருள் வியாபாரிகளை இனங்காண நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தில் இருந்து ஐந்து கிலோமீற்றருக்கு இடைப்பட்ட தூரத்தில் உள்ள பாடசாலையிலேயே கல்வி கற்க முடியும் என, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் வீதம் குறைவாகக் காணப்படுகின்றமை மற்றும் நகர்ப்புற பாடசாலைகளை நோக்கிய மாணவர்களின் நகர்வு ஆகியன குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மருதங்கேணி மற்றும் காரைநகர் பிரதேசங்களில் தனித்தனியாக பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டத்திற்கான நிதியை அதிகரிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 6 இலட்சம் ரூபா நிதி தீவகப் பகுதிக்கு போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை அடுத்து, தரை வழிப்பாதைகள் இல்லாத தீவகப்பிரதேசத்தில் இந்த வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது