மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் மயூரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, காத்தான்குடி பகுதி தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாநகரில் உள்ள வர்த்தக நிலையங்களும்ட மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளன.
அத்துடன், காத்தான்குடி பகுதியில் இருந்து வெளியேறுவோர் தொடர்பிலும், காத்தான்குடி பகுதிக்குள் நுழைவோர் தொடர்பிலும் கண்காணிப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் மயூரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 200 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இதுவரை ஆயிரத்து 180 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்முனை தெற்கு மற்றும் பொத்துவில் அகிய பிரதேசங்கள், கொரோனா அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இன்றைய தினம் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வி.பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 நபர்களும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தின் பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கல்முனை 1,
கல்முனை 1C
கல்முனை 1E
கல்முனை 2
கல்முனை A மற்றும் கல்முனை B
கல்முனை 3
கல்முனை 3A
கல்முனை குடி 1
கல்முனைக் குடி 2
கல்முனைக் குடி 3 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே பசறை – ஹிங்குருகடுவ பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பசறைபகுதியில் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி 54 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம் இன்று குறித்த தொற்றாளர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பசறை பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதன்படி பசறை பகுதியில், இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.