கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கில், மாவட்ட தொடர்பாடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இராணுவத்தின் 25 சிரேஷ்ட அதிகாரிகள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி அலுவலகத்தினால் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தல், தனிமைப்படுத்தல் நடவடிக்கைளை மேற்கொள்ளல் மற்றும் அவற்றுக்குத் தேவையான போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவசர மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில், ஜனாதிபதி அலுவலகம், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு என்பவற்றை, உடனடியாக தொடர்புகொள்ளும் வகையிலும், குறித்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.