சிறுபான்மை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி ஒரு போதும் நாட்டினை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார், ன
நாட்டில் ஜனநாயகம்,பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஆகியன அனைத்து இன மக்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்,
த ஹிந்து பத்திரிகையுடனான நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்,
அத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிங்களின் சடலங்களை புதைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்,
உலக சுகாதார ஸ்தாபனமும் இதனை அங்கீகரித்துள்ளதுடன் முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் தாமும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுஜன பெரமுன கூட்டணியில் கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தாம் அநீதியான முறையில் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்,
தமது 30 வேட்பாளர்களுக்காவது இடமளிக்கப்படுமானால் சுதந்திரக்கட்சி நாடாளுமன்றில் 25 ஆசனங்களையாவது கைப்பற்றியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சி தொடர்ச்சியாக அநீதியாக நடத்தப்படுமானால் தனித்து பயணிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் மாகாண சபைகளை இல்லாதொழிப்பது தீயுடன் விளையாடுவதற்கு ஒப்பானது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த ஹிந்து பத்திரிகையுடனான பேட்டியில் தெரிவித்துள்ளார்,
நாட்டில் மாகாண சபைகளின் கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் பல பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லையென்பதால் அது குறித்து இணக்கப்பாட்டு ரீதியான தீர்மானமொன்றுக்கு வர வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,