20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து ஆராயும் குழுவின் பரிந்துரைகள் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த யோசனையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 12 ஆம் திகதி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன், ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்களான அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்பன்பில, விமல் வீரவன்ச மற்றும் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேம்னாத் சி. தொலவத்த ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய, இந்த ஒன்பது பேர் கொண்ட குழு நேற்றுமுன்தினம் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இல்லத்தில் கூடியது.
இதன்படி, 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த பரிந்துரைகள் நேற்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த அறிக்கையை இன்றைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது, அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.