கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும், நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க்படப்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே 11 ஆம் திகதி முதல் குறித்த மாவட்டங்களில் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மாவட்டங்களில் மே 11 ஆம் திகதி முதல் தனியார் மற்றும் அரச துறை சார்ந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில், நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு வேண்டிய ஆலோசனைகள், நிறுவன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு திறக்கப்பட்டும் நிறுவனங்களில் சுகாதார நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்டப்டுள்ளது.
இதேபோன்று தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தடுப்பதோடு, கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கங்கள் தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி தளர்த்தப்படவுள்ளது.
இதன்படி, மே 4 ஆம் திகதியிலிருந்து இரவு 8.00 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
இந்த நடைமுறை மே ஆறாம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதேவேளை, மே 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே 11 ஆம் திகதி காலை 5 மணிவரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.