இந்தியாவின் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் இடம்பெற்று வருகிறது.
இதற்கமைய, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அசாம் மாநிலத்தில் மூன்றாவதும் இறுதியுமான கட்டமாக தேர்தல் இடம்பெறுவதுடன், மேற்கு வங்காளம் மாநிலத்தில் 3 ஆவது கட்டமாகவும், வாக்குப் பதிவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநிலத்தில் மாலை வரை 53 தசம் 35 வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு இன்று இரவு 7 மணிவரை இடம்பெறவுள்ளதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், தமிழகத்தின் சில தொகுதிகளில் வாக்களிப்பு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்களிப்புக்கு தாமதம் ஏற்பட்டதுடன், பின்னர் குறைபாடு சீர் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.