தமிழீல விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில், TikTok சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், வத்தளைப் பகுதியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
முல்லைதீவு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழற்படங்கள் மற்றும் அவர் சார்ந்த கருத்துக்களை வௌியிட்ட குற்றச்சாட்டிலேயே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், தமிழீல விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்கப்படுத்தும் வகையிலும், குறித்த நபர் பதிவுகளை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அவரின் தொலைபேசியில், தீவிரவாதத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பதிவுகள் உருவாக்கப்பட்டிருந்தாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேகநபர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் உள்ளிட்டமேலும் சில நபர்களின் நிழற்படங்களை, தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில், கிளிநொச்சி பகுதியிலும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.