உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆராயப்பட்டு, அது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, விசேட நிபுணர்களினால் குறித்த அறிக்கை ஆராயப்பட்டு, ஜனாதிபதியினால் சட்டமா அதிபருக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்படுமென தெரிவிக்கபட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சட்டமாஅதிபர் திணைக்களத்தினால் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கபடுவதுடன், பொறுப்பேற்க வேண்டிய நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குற்றப்புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புடன், சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுதல் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கவும் சட்டமாஅதிபரினால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கடந்த முதலாம் திகதி சமர்ப்பிக்க்பட்டது.
அத்துடன், ஆனைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதியும், இரண்டாவது இடைக்கால அறிக்கை 2020 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 2 ஆம் திகதியும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கபட்டது.
இதேவேளை, ஆணைக்குழுவினால் 214 நாட்களில், 457 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய்வதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இது குறித்து ஜனாதிபதியினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் இதற்கான அமைச்சரவை சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.