ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரும் கொவிட் 19 தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஏற்கனவே தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,
எவ்வாறாயினும் அவர்கள் எப்போது அதனை பெற்றுக் கொண்டார்கள் என்பது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிடவில்லை.
இதேவேளை, கொரோனா தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக் கொள்வதைத் துரிதப்படுத்தும் வகையில் COVAX பொறிமுறை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தரநியம இழப்பீடு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து நேரடி விலைமனுக் கோரலின் அடிப்படையில் Oxford AstraZeneca 10 மில்லியன் தடுப்பூசிகளை 52 தசம் 5 அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மூலம் கொள்வனவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியாவின் Astra Zeneca நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள 3 தசம் 5 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அரச மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் குறித்த நிறுவனத்துக்கு இடையில் ஒப்பந்தமொன்று கைசாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பதில் சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.