மட்டக்களப்பு -கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராமங்களில் நில உரிமை தொடர்பான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மட்டக்களப்பு -கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 211 A மாங்கேணி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பிரப்பையடிமடு மற்றும் காரமுனை கிராமங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த கிராமங்களில் யுத்த காலத்திற்கு முன்னரான நில உரிமையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, நாளைய தினம் இந்த ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நாளை காலை 9 மணி முதல் நாள் முழுவதும் இந்த ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த கிராமங்களில் யுத்த காலத்திற்கு முன்னரான நில உரிமை தொடர்பில் கோரிக்கை முன்வைத்தவர்களுக்கு உரிய கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இலக்கம் 211 A மாங்கேணி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பிரப்பையடிமடு மற்றும் காரமுனை கிராமங்களில் காணப்படும் நில உரிமை தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.