நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்
நாட்டின் 73 ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சகோதர மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதேவேளை ஜனாதிபதி பிரதமர் சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவர் முப்படை தளபதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு இதன்போது விசேட வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு முப்படையினரின் விசேட மரியாதை அணிவகுப்பு இடம்பெற்றதுடன் சுபீட்சமான எதிர்காலம் வளமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது
இன்றைய சுதந்திர நிகழ்வில் மரியாதை செலுத்தும் வகையில் 21 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன
சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன எதிர்க்கட்சித்லைவர் சஜித் பிரேமதாச முப்படை தளபதிகள் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பிரமுகர்கள் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்
இதேவேளை சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவருகின்றன.
இதற்கமைய யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்ததுடன் தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அத்துடன் வட மாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி பிரதேசத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது வடமாகாண ஆளுநர் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததுடன் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இசைக்கப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன் தலைமையில் இன்று முற்பகல் சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அம்பாறை மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.