நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை திட்டத்தினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடக்கியவகையில் பிரதேச செயலாளர்கள் ஊடாக அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி இடவசதி காணப்படும் பொது இடங்கள் அல்லது தனியார் காணிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தேன் மரக்கன்று, வேப்பமரக்கன்று மற்றும் உப உணவு பயிர்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டுத் தோட்டங்களில் பழங்கள் அல்லது மருத்துவ தாவரங்கள் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளுமாறு அரச திணைக்களங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று பொது இடங்கள் ,வீடுகள் அரசஅலுவலக வளாகங்கள் ஆகியவற்றில் தேசிய நலனாக கருதி மரக்கன்றுகளை நடும் செயற்பாட்டினை முன்னெடுக்குமாறும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த திட்டத்தினை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு பகுதியிலும் தலா ஒருவரை நியமிக்குமாறு அனைத்து அரச திணைக்களங்களின் பிரதானிகளுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்தும் பொருட்டு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு,கமத்தொழில் அமைச்சு
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வனபாதுகாப்பு திணைக்களம் ஆகிய அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பின் ஊடாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு சுகாதாரதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.