பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இழிவுபடுத்தும் வகையில் , கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்ட கருத்தை தாம் கண்டிப்பதாக எங்கள் மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.
எங்கள் மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
நாட்டுக்கு சொந்தமான துறைமுகங்களை விற்பனை செய்வதற்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதங்கு முன்னர், பொது மக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்
இந்த நிலையில், கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, பேராயரின் குறித்த யோசனையை இழிவுபடுத்தும் வகையில், கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதன்படி, குறித்த கருத்துக்கும் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும், அது தமது கட்சியின் நிலைப்பாடு கிடையாது எனவும், எங்கள் மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், முழு சர்வதேசமும் ஏற்றுக் கொண்ட மதத் தலைவர் என்ற வகையில், பேராயர் அவ்வாறான யோசனைகளை முன்வைப்பதை தாம் வரவேற்பதாகவும் எங்கள் மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், ஞானசார தேரரரின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த விடயம் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகவும், எங்கள் மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.