இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான உத்தேச அணிக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
பயிற்றுவிப்பு உத்தியோகத்தர்கள், வலைப்பந்துவீச்சாளர்கள் மற்றும் உயர்திறன் உத்தியோகத்தர்கள் ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் கொண்ட உத்தேச இலங்கை கிரிக்கெட் குழுவுக்கு நேற்றைய தினம் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மிக்கி ஆர்தர் மற்றும் லஹிரு திரிமான்னே ஆகியோர் அரசாங்கத்தின் கொரோனா தொற்று சிகிச்சை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 36 பேர் கொண்ட உத்தேச இலங்கை கிரிக்கெட் குழுவானது 3 தனித்தனி குழுக்களாக பிரிந்து சுகாதார நடைமுறைகளுக்கமைய கடந்த 28 ஆம் திகதி முதல் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வேறு காலப்பகுதியில் நடத்துவது குறித்து ஶ்ரீலங்கா கிரிக்கெட் அவதானம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.