பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென பல தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் கம்பனிகள் ஆகியவற்றுக்கிடையே தொடர்ச்சியாக பேச்சுவார்தைகள் இடம்பெற்றன.
இந்த நிலையில், ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள உயர்வுக்கு கம்பனிகள் இணங்காத நிலையில், கடந்த பேச்சுவார்தைகள் தோல்வியில் முடிவடைந்தன
இதன்பிரகாரம் சம்பள நிர்ணய சபையில் நாளை, இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்